கட் -அவுட்டுக்கு பாலாபிஷேகம் நடத்தச் சொல்லவில்லை என நடிகர் சிம்பு மறுத்துள்ளார்.
பாக்கெட் பாலை அண்டாவில் ஊற்றிக் காய்ச்சி வாய் உள்ள ஜீவன்களுக்கு கொடுங்கள் என்பது தான் நான் சொன்னதற்கு அர்த்தம் என்றும் விளக்கம் அளித்துள்ளார் சிம்பு.
சிம்புவின் நடிப்பில் "வந்தா ராஜாவாகத்தான் வருவேன்" படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. இந்தப் படத்திற்கு கட்-அவுட், பேனர்,பாலாபிஷேகம், கூடுதல் விலைக்கு டிக்கெட் என்றெல்லாம் வீண் செலவு வேண்டாம். அந்தக் காசில் பெற்றோருக்கு துணிமணி எடுத்துக் கொடுத்த சந்தோசப்படுத்துங்கள் என்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் சிம்பு. இந்த வீடியோ வெளியிட்ட சில தினங்களில் அப்படியே தலைகீழாக மாற்றி, படம் ரிலீசின் போது கட்- அவுட், பேனர், பாக்கெட் பால் இல்ல..அண்டா அண்டாவாக பாலை ஊற்றுங்கள் என ஆவேசமாக பேசி மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். சிம்புவின் இந்த வீடியோ படு வைரலாகி சிம்பு ரசிகர்களும் தடபுடலாக தயாராகி வருகின்றனர்.
இப்படியெல்லாமா ரசிகர்களை தூண்டி விடுவது என்று சிம்புவுக்கு எதிரான விமர்சனங்களும் எழுந்தன. பால் முகவர்கள் சிம்பு மீது போலீசில் புகாரும் கொடுத்தனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், நல்ல விதமாக முதல் வீடியோவில் நான் சொன்னதற்கு சிலர் எதிர்வினை ஆற்றியதால் 2-வது வீடியோவை வெளியிட்டேன். அந்த வீடியோவில் நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.
அந்த வீடியோவில் எந்த இடத்திலாவது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யுங்கள் என்று கூறியிருக்கறேனா? இல்லவே இல்லை. பாக்கெட் பாலை அண்டா அண்டாவாக ஊற்றுங்கள் என்று தான் கூறினேன். அப்படியென்றால் பாலை அண்டாவில் ஊற்றி ... காய்ச்சி ... வாய் உள்ள, உயிருள்ள ஜீவன்களுக்கு கொடுங்கள் என்பது தான் அர்த்தம் என்ற புது விளக்கத்தை கூறினார் சிம்பு. இருந்தாலும் நான் சொன்னது தப்புதான் என்றால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்றும் தடாலடியாக தெரிவித்தார்.