பாரத ரத்னா விருது : வீரசாவர்க்கரை மறந்தது ஏன்?- மோடிக்கு சிவசேனா சரமாரி கேள்வி!
வீரசாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்காதது ஏன்? என்று பாரத ரத்னா விருது குறித்த சர்ச்சையை சிவசேனாவும் எழுப்பியுள்ளது.
இந்தாண்டு பாரத ரத்னா உள்ளிட்ட பத்ம விருதுகள் வழங்கப்பட்டதற்கு பல்வேறு விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்துள்ளது.வரும் தேர்தலை மனதில் வைத்து அரசியல் ஆதாயம் பெறும் முயற்சி என பாஜக மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. அசாம் பாடகர் பூபென் ஹசாரி காவுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதை விமர்சித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கார்கே மீது வழக்குக் கூட பதிவு செய்யப் பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் விருதை ஏற்றால் தவறான அர்த்தமாகிவிடும் என்று ஒரிசா முதல்வர் நவீன்பட்நாயக்கின் சகோதரி தமக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை வேண்டாம் என்று ஏற்க மறுத்துவிட்டார். இந்நிலையில் வீரசாவர்க்கருக்கு பாரத ரத்னா கொடுக்காதது ஏன்? என்ற கேள்வியை கேட்டு மோடியை சிவசேனா தமது கட்சிப் பத்திரிகையான சாம்னா வில் கடுமையான விமர்சித்துள்ளது.
சுதந்திரப் போராட்ட காலத்தில் தீரத்துடன் போராடி அந்தமான் சிறையில் கொடுமை அனுபவித்தவர் வீரசாவர்க்கர் . பாரத ரத்னா விருதுக்கு தகுதியான வீரசாவர்க்கரை இந்துத்வா பின்னணி உடையவர் என்று கூறி காங்கிரஸ் புறக்கணித்து வந்தது. வீரசாவர்க்கருக்கு விருது வழங்க வேண்டும் என பல காலமாக பாஜகவும், சிவசேனாவும் வலியுறுத்தி வரும் நிலையில் இப்போது கொடுக்காவிட்டால் எப்போது கொடுக்கப் போகிறீர்கள்?
சமீபத்தில் கூட அந்தமான் சென்ற மோடி, சாவர்க்கர் அடைபட்டிருந்த சிறையை பார்த்து விட்டு மனம் உருகியதையெல்லாம் கடலிலேயே கரைத்து விட்டாரா? வீரசாவர்க்கரை மறந்தது ஏன்?அசாமின் ஹசாரியாவுக்கு கொடுத்தது சுத்த அரசியல் ஆதாயத்திற்குத் தான் என்று சாம்னா பத்திரிகையில் சிவசேனா தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவுத் சரமாரியாக விமர்சித்துள்ளார்.