அன்னிய செலாவணி மோசடி வழக்குகளில் சசிகலாவுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு
அன்னிய செலாவணி மோசடி தொடர்பான வழக்குகளில் சசிகலாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இன்று பதிவு செய்யப்பட்டன.
ஜெ.ஜெ.டிவி உபகரணங்கள் இறக்குமதி உள்ளிட்ட விவகாரங்கள் சசிகலா உள்ளிட்டோர் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீதான 3 வழக்குகள், இருவர் மீதும் தனியாக 2 வழக்குகள் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இவ்வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதலில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின் கையெழுத்திடுவது உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படாததால், சசிகலாவுக்கு எதிராக மீண்டும் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக சசிகலாவை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் சசிகலாவிடம் மீண்டும் வீடியோ கான்பரன்சில் குற்றச்சாட்டு பதிவு செய்து வழக்கை 4 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று எழும்பூர் மாஜிஸ்திரேட் நடுவர் மன்ற நீதிபதி மலர்மதி முன்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.