காங்கிரஸ் எம்எல்ஏக்கள் செயல்பாட்டால் அதிருப்தி - கர்நாடக முதல்வர் குமாரசாமி ராஜினாமா மிரட்டல்!

தம்மைப் பற்றி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்ந்து விமர்சித்து வருவதற்கு குமாரசாமி கண்டனம் தெரிவித்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு அமைந்ததில் இருந்தே சச்சரவும் தொடர்கிறது . அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் போர்க்கொடி உயர்த்தினர். காங்கிரஸ் எம்எல்ஏக்களை அணி மாறச் செய்து ஆட்சியைக் கவிழ்க்க பாஜக ஆபரேசன் தாமரை என்ற பெயரில் திட்டம் போட்டது. இதனை காங்கிரஸ் தலைவர்கள் சாமர்த்தியமாக முறியடித்தனர்.

இந்தப் பிரச்னை முடிந்த நிலையில் காங்கிரசுக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கும் இடையே இப்போது முட்டல் மோதல் எழுந்துள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்களில் சிலர் குமாரசாமியால் எங்களுக்கு எந்த நன்மையும் இல்லை. எங்களுக்கு எப்போதும் சித்தராமையா தான் தலைவர் என்று விமர்சித்தது இரு கட்சிகளிடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பதவியைப் பிடிக்க எம்எல்ஏக்களை தூண்டி விடுவதாக சித்தராமையா மீது குற்றம் சுமத்தியுள்ளார் குமாரசாமி .

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வரம்பு மீறிப் பேசி வருகின்றனர். தொடர்ந்து இவ்வாறு பேசிக் கொண்டிருந்தால் சகித்துக் கொள்ளமாட்டேன். முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் தயங்க மாட்டேன் என குமாரசாமி மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News >>