3-வது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி -நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி.
இன்று நடந்த 3-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்று 5 போட்டித் தொடரில் ஹாட்ரிக் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. மவுண்ட் மனுகனுயில் இன்று நடந்த 3-வது போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இந்திய வீரர்களின் அபாரபந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 49 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.ராஸ் டெய்லர் (93), லாதம் (51) அரைசதம் அடித்தனர். 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது ரோகித் - தவான் ஜோடி . அதிரடியாக 6 பவுண்டரிகளை தொடர்ந்து விளாசிய தவான் 28 ரன்களில் அவுட்டானார். இதன் பின் ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் கோஹ்லி. இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு ரன் சேர்த்தனர். ரோகித் (62), கோஹ்லி (60) இருவரும் அரைசதம் கடந்து அடுத்தடுத்து அவுட்டாகினர்.
இதன் பின் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் (38), அம்பதி நாயுடு (40) இருவரும் போட்டி போட்டு பவுண்டரி, சிக்சர்களாக விளாசியதால் 43 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. அபாரமாக பந்து வீசிய முகமது சமி ஆட்ட நாயனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்தியா 5 நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது. உலகக் கோப்பை ஒரு நாள் போட்டிகள் நெருங்கும் வேளையில் இந்திய அணி வெற்றிமேல் வெற்றியை குவித்து வருவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.