வரதட்சணை கொடுக்கலனு மிதிச்சுட்டார் - 7 மாத கர்ப்பிணியை வயிற்றில் மிதித்த கணவர்!
வரதட்சணைக்காக கர்ப்பிணி மனைவியை கணவர் வயிற்றில் எட்டி உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தேரிருவேலியைச் சேர்ந்தவர் தேவராஜ். துப்பரவு தொழிலாளியான இவரது மனைவி பாதமுத்து தற்போது ஏழு மாத கர்ப்பமாக உள்ளார். இதற்கிடையே, பாதமுத்துவுக்கும், தேவராஜுக்கும் அடிக்கடி வார்த்தை மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வரதட்சணை தொடர்பாக தான் இருவருக்கும் இந்த மோதல் எனவும், திருமணத்தின் போது கொடுக்கப்படுவதாக சொல்லப்பட்ட வரதட்சணையை பாதமுத்தின் குடும்பத்தார் தரவில்லை என்பதால் அடிக்கடி சண்டை வந்துள்ளது.
கடந்த வாரம் இவர்களது சண்டை பெரியதாக மாறியுள்ளது. அப்போது, ஏழு மாத கர்ப்பிணி என்றுகூட பாராமல் மனைவி பாதமுத்துவை தேவராஜ் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். இதனால் வலியில் துடித்த கர்ப்பிணி பெண் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துமனையில் சேர்ந்துள்ளார்.
மருத்துவமனையில் இருந்தவாறே கணவன் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார் பாதமுத்து. இதுகுறித்து பேசும்போது, ``வரதட்சணை கொண்டுவர சொல்லி 7 மாத கர்ப்பிணி கூட பாக்காம வயிற்றில் எட்டி உதைச்சுட்டார். கஷ்டப்பட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தா இங்கயும் வந்து எனக்கு வைத்தியம் பாக்கக்கூடாது என சண்டைபோடுறார்" என கண்ணீருடன் கூறுகிறார் பாதமுத்து. புகாரை அடுத்து தேவராஜிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.