சான்றிதழ் கொடுக்கவில்லை - சர்வதேச போட்டிகளில் அம்பதி ராயுடு பந்துவீச தடை!
இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடுவுக்கு பௌலிங் வீச தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இந்திய அணியில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு. காயத்தில் இருந்து விடுபட்டு சமீபகாலமாக நல்ல பார்மில் இருந்து வருகிறார். இதனால் இந்திய அணியின் லிமிட்டெட் ஓவர் அணிகளில் தவறாமல் இடம்பிடித்து முத்திரை பதித்து வருகிறார். இதற்கிடையே, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்றிருந்த அவர், முதல்ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
பேட்ஸ்மேன் ஆன இவர் அந்தப் போட்டியில் இரண்டு ஓவர்கள் பந்துவீசினார். 13 ரன்கள் விட்டுக்கொடுத்து அவர் ஓவரில் விக்கெட்டுகள் ஏதும் விழவில்லை. ஆனால் அவரின் பந்துவீச்சில் சந்தேகங்கள் இருப்பதாகவும், ஐசிசி விதிகளுக்கு மாறாக இருப்பதாகவும் போட்டி நடுவர்கள் குற்றம் சாட்டி, அதற்கான அறிக்கையில் பிசிசிஐயிடமும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடமும் தாக்கல் செய்தனர்.
நடுவர்களின் அறிக்கையை தொடர்ந்து ராயுடுவின் பந்துவீச்சை ஆய்வு செய்ய ஐசிசி உத்தரவிட்டது. 14 நாட்களுக்குள் பந்துவீச்சு சோதனையில் பங்கேற்று சான்றிதழை கொடுக்க வேண்டும் எனவும் ராயுடுவுக்கு உத்தரவிடப்பட்டது. அதுவரை போட்டிகளில் பந்துவீசலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஐசிசியின் 14 நாள் கெடு முடிந்தும் ராயுடு சோதனையில் பங்கேற்கவில்லை. இதனையடுத்து தற்போது சர்வதேச போட்டிகளில் ராயுடுவுக்கு பந்துவீச ஐசிசி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் உள்ளூர் போட்டிகளில் பந்துவீசலாம் என அவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.