ஆரம்பிக்கப்படாத எம்.ஜி.ஆர். படம் மீண்டும் ஆரம்பம்!
எம்.ஜி.ஆர். நடித்து 1973 ல் வெளிவந்த படம் உலகம் சுற்றும் வாலிபன். கடும் நெருக்கடிகளுக்கு இடையில் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தில் அண்ணன் முருகன், தம்பி ராஜு ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார் எம்.ஜி.ஆர்.
படத்தின் முடிவில் எமது அடுத்த தயாரிப்பு ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற எழுத்து வரிகள் திரையில் தோன்றும். ஆனால், இறுதிவரையில் அப்படியொரு படத்தை அவரால் உருவாக்க இயலாமலேயே போனது.
அவர் உயிருடனில்லாத இன்றைய சூழலில் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆர். தோன்றிட உருவாகப் போகிறது கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு. உலகம் சுற்றும் வாலிபனில் நடித்த, நகைச்சுவை நடிகர் காலம்சென்ற ஐசரிவேலன். அவரின் மகன் ஐசரி கணேஷ் மற்றும் பிரபுதேவா தயாரிக்கும் இந்தப் படத்தின் திரைக்கதையை எம். அருள் மூர்த்தி எழுதி இயக்குகிறார்.
எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான ஜனவரி 17 அன்று இந்தப் படத்தின் துவக்க விழா சென்னை அடையாறு எம்ஜிஆர் - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (முன்பு எம்.ஜி.ஆரின் சத்யா ஸ்டூடியோ) வளாகத்தில் நடந்தது.
இதில் அரசியல் பிரவேச அறிவிப்புகளில் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, ‘க்ளாப்’ அடித்து படப்பிடிப்பைத் தொடங்கிவைத்தார். கமல்ஹாசன் காமிராவை இயக்கி வைத்தார்.
உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆருக்குடன் நடித்த லதாவுடன் நடிகைகள் சௌகார் ஜானகி, சச்சு, காஞ்சனா, சத்யபிரியா, ராஜஸ்ரீ, அம்பிகா, ரோஜாரமணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.