சமூக போராளி நந்தினிக்கு கல்யாணம் - பால்ய கால நண்பரை மணக்கிறார்!
துரையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி நந்தினி மது விலக்கு போராட்டங்கள் மூலம் தமிழகத்தில் பிரபலமானவர்.
கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக மது விலக்கை வலியுறுத்தி தனது தந்தை உடன் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். ஜெயலலிதா ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் போதே மதுவிலக்குக் கோரி கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் காலத்திலேயே உண்ணாவிரதப் போராட்டத்தைத் தனது தந்தை உடன் இணைந்து நடத்தினார். இதற்காக பல்வேறு முறை சிறையும் சென்றுள்ளார். தற்போதும் தமிழகத்தின் பிரச்சினைகளை முன்னிறுத்தி போராடி வருகிறார்.
ஸ்டெர்லைட், மீத்தேன், எனத் தொடர்ந்து பொதுமக்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் செயல்படும் போதெல்லாம் அசராமல் போராட்டக் களத்தில் குதித்துவிடுவார். கைது, சிறை, வீட்டுச்சிறை என அடுக்கடுக்காகத் தடைகள் விழுந்த போதிலும் தனது போராட்டக் குணத்திலிருந்து சற்றும் தொய்வு அடையாது போராடி வருகிறார் நந்தினி.
இந்நிலையில் நந்தினி இல்லற வாழ்வில் இணையவுள்ளார். தனது பால்ய கால நண்பரான குணா ஜோதிபாசு என்பவரை கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார் நந்தினி. இருவரின் தந்தையும் நண்பர்கள் என்பதால் குடும்பத்தார்கள் ஆசியோடு நண்பரை கரம்பிடிக்கவுள்ளார். மணமகன் ஜோதிபாசு மென் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இன்னும் ஆறு மாதத்தில் திருமணம் நடைபெறும் என்றும், சமூக பிரச்சினைகளில் இனி இருவரும் இணைந்தே போராடுவோம் என்றும் சமூக ஆர்வலர் நந்தினி தெரிவித்துள்ளார்.