கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணுஉலைகள்
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மூன்று மற்றும் நான்காம் அணுஉலைகளுக்கான கட்டுமான வேலைகள் துரிதமாக நடந்து கொண்டுள்ளதாக இந்திய அணுமின் கழகத்தின் செயல் இயக்குநர் டி.ஜே.கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கூடங்குளத்தில் முதலாவது அணுமின் உலை 2016ம் ஆண்டு 278 நாள்கள் தொடர்ந்து இயங்கியுள்ளது. இரண்டாவது அணுமின் உலை 2018 ஜனவரி 26ம் தேதியுடன் 97 நாள்கள் தொடர் இயக்கத்தில் உள்ளது. கார்பன் என்னும் கரி பயன்படாத மின் உற்பத்தி முறையை ஊக்குவிக்கும் வண்ணம் 1000 மெகா வாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணுமின்உலைகளை புதிதாக அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
மூன்றாம், நான்காம் அணுஉலைகளின் நீர்ம தொழில் கட்டமைப்பு, மின்உலை மற்றும் தேவையான கூடுதல் கட்டுமானங்கள் விரைவில் நடந்து வருகின்றன என்று குடியரசு தின விழாவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் முதன்முறையாக மின்கடத்தும் அமைப்பில் நான்கு இலக்க (1000 மெகாவாட்) அளவு மின்சாரத்தை கூடங்குளம் அணுமின் நிலையம் தயாரித்து அளித்துள்ளது.
இரண்டாவது அணுமின் உலை ஜனவரி 21ம் தேதி வரைக்கும் 8,965 மில்லியன் யூனிட் மின்சாரத்தை தயாரித்துள்ளது என்று கூறிய அவர், கூடங்குளம் அணுமின் நிலையமும் இந்திய அணுமின் கழகமும் இணைந்து சுற்றுவட்டாரங்களில் இதுவரை 330 மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றியுள்ளன என்றும் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.