திரிணமுல் கட்சியில் இணைந்த காங்கிரஸ் பெண் எம்.பி!
மே.வங்கத்தில் காங்கிரஸ் பெண் எம்.பி திரிணாமுல் கட்சியில் இணைந்தார்.
அவரை உடனடியாக வேட்பாளராகவும் அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் மம்தா . மே.வங்கத்தில் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் மவுசம் பெனாசிர் நூர். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான கனிகான் சவுத்ரியின் மருமகளாவார். கனி கான் சவுத்ரி தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்ற மால்டா தொகுதியில் அவருடைய மறைவுக்குப் பின் மருமகள் நூர் இருமுறை எம்.பி.யாக வெற்றி பெற்றார். தற்போது மால்டா வடக்கு, தெற்கு என தொகுதி பிரிக்கப் பட்டதில் மால்டா வடக்கு தொகுதி எம்.பி.யாக உள்ளார். இன்று மே.
வங்க முதல்வர் மம்தாவை சந்தித்து திரிணாமுல் கட்சியில் திடீரென இணைந்தார். உடனடியாக வரும் தேர்தலில் திரிணாமுல் சார்பில் மால்டா வடக்கு தொகுதியின் வேட்பாளராகவும் நூரை அறிவித்தார் மம்தா. மே.வங்கத்தின் வளர்ச்சிக்கு மம்தா பானர்ஜி அபாரமாக பாடுபடுகிறார். 2017-ல் மால்டாவில் வெள்ளம் வந்த போது களத்தில் இறங்கி மம்தா உதவியதை மறக்க முடியாது. அவருடைய மதச்சார்பின்மை கொள்கையும் கவர்ந்ததால் திரிணாமுல் கட்சியில் இணைந்ததாக பெனாசிர் நூர் தெரிவித்துள்ளார்.
பெனாசிர் நூர் கட்சியிலிருந்து விலகியது குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் கூறுகையில், மே.வங்கத்தில் காங்கிரசை செல்வாக்கை வீழ்த்த மம்தா திட்டமிட்டு செயல்படுகிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.