இளையராஜா 75 நிகழ்ச்சியை தொடக்கி வைக்கிறார் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்
தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற இருக்கும் இளையராஜா 75 நிகழ்ச்சியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார். இந்த தகவலை விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்த நாள் மற்றும் அவரது வெற்றிகரமான இசை பயணத்தை கொண்டாடும் விதமாக வரும் பிப்ரவரி மாதம் 2ம் மற்றும் 3ம் தேதிகளில் பிரம்மாண்ட திரைக் கொண்டாட்டம் நிறைந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சி இரு தினங்களிலும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் முதல் நாளன்று இசைஞானியின் பாடலுக்கு முன்னணி திரை நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சிகளும் தொடர்ந்து, இரண்டாம் நாளில் இசைஞானி இளையராஜா மற்றும் ஆர்கெஸ்ட்ரா குழு சார்பில் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இதற்காக டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரஜினி உள்பட திரை நட்சத்திரங்களுக்கும் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இளையராஜா 75 நிகழ்ச்சியை தொடங்கி வைக்குமாறு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்றுக்கொண்ட பன்வாரிலால் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க ஒப்புதல் அளித்துள்ளார்.இந்த தகவலை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.