ராமர் கோவில் விவகாரம்... மத்திய பாஜக அரசு மீது நிர்வாண சாதுக்கள் நாடாளுமன்றம் கடும் அதிருப்தி
ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு பாஜக செயலற்று இருப்பதாக உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளாவில் கூட்டப்பட்ட நிர்வாண சாதுக்களின் நாடாளுமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான நிர்வாண சாதுக்கள் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர்.
இந்துத்துவா கொள்கைகளை செயல்படுத்தக் கூடிய அமைப்புகளாக இருப்பவை ‘அகாடாக்கள்’. எந்த ஒரு அரசு சட்டங்களும் இந்த அகாடாக்களை கட்டுப்படுத்தாது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை உள்ளிட்ட கோர சம்பவங்களை அரங்கேற்றியவர்கள் இந்த அகாடாக்களை சேர்ந்த நிர்வாண சாதுக்கள்தான். இந்த நிர்வாண சாதுக்களின் நாடாளுமன்ற கூட்டம் கும்பமேளாவில் கூட்டப்பட்டது.
இதற்கு துவாரகாபீடா சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்தா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், கடந்த நான்கரை ஆண்டுகால பாஜக ஆட்சியில் ராமர் கோவில் கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் மத்திய பாஜக அரசு மேற்கொள்ளாதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு கெடு விதிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் பசு பாதுகாப்பு, மதமாற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.