ராகுலின் அமேதியில் தியேட்டரே இல்லை - ஊரி படத்தை மொபைல் தியேட்டரில் இலவசமாக காண்பிக்கும் ஸ்மிருதி!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் ஒரு தியேட்டர் கூட இல்லை என்பதால் "ஊரி"படத்தை மொபைல் தியேட்டர் மூலம் ஊர் ஊராக இலவசமாக திரையிட மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி ஏற்பாடு செய்துள்ளார்.

சஞ்சய் காந்தி, ராஜுவ்காந்தி, ராகுல்காந்தி என கடந்த 40 ஆண்டு காலமாக ஒரே குடும்பத்திற்கு ஓட்டுப் போட்டு பழகிய மக்கள் வசிக்கும் தொகுதிதான் உ.பி.யில் உள்ள அமேதி . தொகுதி முழுவதுமே கிராமங்கள் தான் என்பதால் இதுவரை ஒரு தியேட்டர் கூட இன்னும் வரவில்லை. அந்த அளவுக்கு நாகரீகம் வளரவில்லை.

தற்போது இந்திய ராணுவத்தின் வீர, தீர, பெருமைகளை பறைசாற்றும் "ஊரி: தி.சர்ஜிகல் ஸ்டிரைக்" திரைப்படம் நாடு முழுவதும் சக்கை போடு போடுகிறது. இந்தப் படத்தை தியேட்டரே இல்லாத அமேதி தொகுதி மக்களும் பார்க்கட்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி ஒரு ஐடியா போட்டார்.

மொபைல் தியேட்டர் ஒன்றை ஏற்பாடு செய்து அமேதி தொகுதியில் குடியரசு தினம் முதல் ஊர் ஊராக இலவசமாக காண்பிக்கப்படுகிறது. 2017-ல் நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்ட்ரைக் குறித்து காங்கிரஸ் பொய் குற்றச்சாட்டு கூறி வருகிறது. அது உண்மை என அமேதி மக்களும் தெரிந்து கொள்ளவே இந்த ஏற்பாடு என ஸ்ம்ருதி கூறினாலும், காங்கிரசாரோ இதை மறுக்கின்றனர். வரும் தேர்தலில் மீண்டும் இங்கு போட்டியிடும் முடிவில் உள்ள ஸ்ம்ருதி தேர்தல் ஆதாயத்திற்காகவே சினிமா படம் காட்டுகிறார் என்கின்றனர்.

கடந்த 2014 பொதுத் தேர்தலில் ராகுலை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்தான் ஸ்மிருதி இரானி. பின்னர் ராஜ்யசபா எம்பி ஆகி மத்திய அமைச்சராகவும் உள்ளார்.

More News >>