வீரச்சாவடைந்த தமிழகnbspவீரரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!- அன்புமணி இராமதாஸ் அறிக்கை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது வீரச்சாவு அடைந்த தமிழக வீரர் சுரேஷுக்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தருமபுரி மாவட்டம் பண்டாரச்செட்டிப்பட்டியைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் சுரேஷ் பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் வீரச்சாவு அடைந்தார் என்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாப்பிரெட்டிப்பட்டித் தொகுதிக்குட்பட்ட பண்டாரச்செட்டிப்பட்டியில் ராணுவ மரியாதையுடன் இன்று நடைபெறவுள்ள அவரது இறுதிச் சடங்குகளில் பா.ம.க.வினர் பங்கேற்று மரியாதை செலுத்துவார்கள்.
இந்திய இராணுவம், துணை இராணுவப்படையில் அதிக எண்ணிக்கையில் சேர்ந்து தேசத்தை காக்கும் பணியில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முன்னணியில் இருப்பது தமிழர்கள் என்ற வகையில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயமாகும். அதேநேரத்தில் தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த நமது படைவீரர்களின் குடும்பத்தினரைப் பேணிக் காப்பதில் நமது அரசுகள் போதிய அக்கறை காட்டுவதில்லை என்பது தான் வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.
பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் வீரச்சாவடைந்த சுரேஷின் குடும்பத்திற்கு அவரது ஊதியம் மட்டுமே வாழ்வாதாரமாக இருந்தது. அவர் வீரச்சாவடைந்து விட்ட நிலையில் அவரது மனைவிக்கு அவரது கல்வித்தகுதிக்கு ஏற்ற அரசு வேலை வழங்க தமிழக ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.