விவசாயி .... தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி ... பத்திரிகையாளர் - பன் முகத்தில் ஜொலித்த ஜார்ஜ் பெர்னாண்டஸ்!

விவசாயியாக வாழ்க்கையைத் தொடங்கிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் தொழிற்சங்கவாதியாக பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து சிறந்த அரசியல்வாதி, பத்திரிகையாளர் என பன்முகம் கொண்டவர்.

1930-ல் கர்நாடக மாநிலம் மங்களுருவில் விவசாய குடும்பத்தில் பிறந்தார். பாதிரியார் ஆக விரும்பி அது தொடர்பான பட்டப் படிப்பையும் முடித்தவர் பணியில் சேர்ந்ததோ ரயில்வேயில் . தொடர்ந்து ரயில்வே தொழிற்சங்கத்தில் ஈடுபாடு. முதன்முதலாக 1967-ல் மும்பையிலிருந்து மக்களவைக்கு தேர்வாகி நீண்ட அரசியல் பயணத்தில் பல்வேறு சாதனைகள் படைத்தார். 1974-ல் நடந்த தேசம் தழுவிய ரயில்வே போராட்டத்தை ஒருங்கிணைத்து வெற்றி பெறச் செய்து பிரதமராக இருந்த இந்திராவையே கிடுகிடுக்கச் செய்தவர். 1975-ல் எமர்ஜென்சியை தீவிரமாக எதிர்த்தார். சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தீவிர விசுவாசியாக இருந்த ஜார்ஜ், சிறையில் இருந்தபடியே 1977ல் நடந்த பொதுத் தேர்தலில் வென்று எம்பியாகி . மொரார்ஜி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தகவல் தொடர்பு, தொழில் துறை அமைச்சராக பணியாற்றினார். 1967,77, 80,89,91,96,98, 99, 2004 என 9 முறை மக்களவை எம்பி யாகவும், 2009ல் மாநிலங்களவைக்கும் தேர்வானவர்.

1989-ல் வி.பி.சிங் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராகவும்,1999 முதல் 2004 வரை வாஜ்பாய் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார். அப்போதுதான் பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு சோதனை நடத்தி உலகை திரும்பிப் பார்க்கச் செய்தார். இதே காலகட்டத்தில் கார்கில் போரிலும் வெற்றி கண்டு ராணுவத்தின் வலிமையை உலகறியச் செய்தார்.

2004 -ல் இவர் மீது சவப்பெட்டி ஊழல் குற்றச்சாட்டு எழ, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அந்தக் குற்றச்சாட்டு நிரூபணமாகவில்லை. கடந்த சில வருடங்களாக அல்சைமர் எனும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்த பெர்னாண்டஸ் 88 வயதில் காலமானார்.

More News >>