சஸ்பென்ட் நடவடிக்கைக்கு பயந்து பணிக்கு திரும்பிய 95% ஆசிரியர்கள் - போராட்டம் புஸ்வாணம் தானா?
சஸ்பென்ட் நடவடிக்கைக்கு பயந்து 95% ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பினர்.
இதனால் ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப் போராட்டம் பிசுபிசுத்து விட்டதாக தெரிகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சம்பள நிலுவையை வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். பெருமளவில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.
பல தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மூடப்பட்டன. பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. கைது, சஸ்பென்ட், தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் என அடுத்தடுத்து நடவடிக்கை மேற்கொண்ட அரசு, இன்று காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்ப அவகாசம் அளித்தது. இல்லையெனில் பணிக்கு வராதவர்களின் பணியிடம் காலியானதாக அறிவிக்கப்படும் என எச்சரித்தது. அத்துடன் ஏற்கனவே சஸ்பென்ட் நடவடிக்கைக்கு ஆளான ஜாக்டோஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் 450 பேரின் பணியிடம் காலியானதாகவும் நேற்று உத்தரவும் போடப்பட்டது.
அரசின் எச்சரிக்கையால் பெரும்பாலான ஆசிரியர்களிடையே பீதி ஏற்பட்டது. நேற்று மாலை முதல் பணிக்குத் திரும்பும் முடிவை பெரும்பாலான ஆசிரியர்கள் எடுத்து விட்டனர். இதனால் இன்று மொத்தமுள்ள ஆசிரியர்களில் 95% பேர் பணிக்குத் திரும்பி விட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பணிக்குத் திரும்பாதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களின் Cணியிடம் காலியானதாக அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகளால் ஜாக் டோ-ஜியோ போராட்டம் பிசுபிசுத்து விட்டதாகவே தெரிகிறது.