கோவா முதல்வர் பாரிக்கருடன் ராகுல் திடீர் சந்திப்பு!
ரபேல் டேப் விவகாரம் குறித்து விமர்சித்த மறுநாளே கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை காங்கிரஸ் தலைவர் ராகுல் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
கோவாவுக்கு தாய் சோனியாவுடன் ஓய்வெடுக்கச் சென்றுள்ளார் ராகுல் . நேற்று தனது டிவிட்டரில், ரபேல் டேப் விவகாரம் அம்பலமாகி 30 நாட்கள் கடந்து யிட்டது. எப்ஐஆரும் போடவில்லை, எந்த விசாரணையும் இல்லை. டேப் விவகாரத்தில் சிக்கிய கோவா அமைச்சர் ரானே மீதும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
அப்படி என்றால் அந்த டேப் விவகாரம் உண்மை தானா? மோடி பயப்படுமளவுக்கு ரபேல் ரகசியங்கள் பாரிக்கர் டம் உள்ளதா? என்றெல்லாம் நேற்று ராகுல் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் இன்று காலை மனோகர் பாரிக்கரை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன். விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தேன் என்று ராகுல் டிவிட்டரில் மற்றொரு பதிவிட்டுள்ளார்.
இது குறித்து கோவா மாநில காங்கிரஸ் தலைவர் சாவ்லேகர் கூறுகையில், பாரிக்கருடனான ராகுலின் சந்திப்பு 5 நிமிடம் மட்டுமே நடந்தது. உடல்நலம் பற்றி மட்டுமே விசாரித்தார். தனிப்பட்ட இந்த சந்திப்பில் வேறெதும் பேசவில்லை என்று கூறினார்.