நாளை காந்தி நினைவு தினத்திலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
காந்தி நினைவு தினமான நாளை (ஜன 30) தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், வள்ளலார் தினம், மிலாடிநபி போன்ற மதுவின் தீமைகளை எடுத்துரைத்த மகான்களின் பிறந்த நாளுக்கும், குடியரசு, சுதந்திர தினம், மே தினம் போன்ற தேசிய தினங்களுக்கும் தமிழகத்தில் இதுவரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு வந்தது. காந்தியின் நினைவு நாளான ஜன 30-ந் தேதிக்கும் விடுமுறை அறிவிக்கக் கோரியும், பொது இடங்களில் வரம்பு மீறி வைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரியும் கன்னியாகுமரியைச் சேர்ந்த ரதீஷ் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, இனிமேல் காந்தி நினைவு தினத்துக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என தாமாகவே முன்வந்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,தமிழக அரசின் உள்துறைச் செயலருக்கு உத்தரவிட்டது. இதனால் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையை அறிவித்துள்ளது தமிழக அரசு .
இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ஜனவரி மாதத்தில் 16-ந் தேதி (திருவள்ளுவர் தினம்) 21-ந் தேதி (வள்ளலார் தினம்), ஜனவரி 25 (குடியரசு தினம்), 30-ந் தேதி (காந்தி நினைவு தினம்) என நான்கு நாட்கள் விடுமுறையால் மதுப்பிரியர்களுக்கு திண்டாட்டம் தான் போலும்.