தவறு செய்யும் ஹர்த்திக் பாண்டியாவை என்னுடன் ஒப்பிட வேண்டாம் - கபில்தேவ்
ஹர்த்திக் பாண்டியாவை என்னுடன் ஒப்பிட வேண்டாம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்த்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையிலும் பல வெற்றிகளை குவித்து வருகின்றன. இதனால், ஹர்த்திக் பாண்டியாவை கபில்தேவ் உடன் கிரிக்கெட் வல்லுநர்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் மட்டுமே சிறப்பாக விளையாடியுள்ள பாண்டியா அடுத்த மூன்று இன்னிங்சில் தொடர்ந்து சொதப்பியுள்ளார்.
முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 93 ரன்கள்,2-வது இன்னிங்சில் 1 ரன் எடுத்தார். செஞ்சூரியனில் நடந்த 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 15 ரன்னும், 2-வது இன்னிங்சில் 6 ரன்னும் எடுத்தார்.
குறிப்பாக செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் மிக கவனக்குறைவால் ‘ரன் அவுட்’ ஆனதுடன் மட்டுமல்லாமல், 2-வது இன்னிங்சில் தேவையில்லாத பந்தை தேவையில்லாமல் அடிக்க முயன்று விக்கெட் கீப்பரிடம் ‘கேட்ச்’ ஆனார்.
இந்த கவனக்குறைவான ஆட்டத்தால் முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ், ஹர்த்திக் பாண்டியா என்னுடன் ஒப்பிடுவதற்கு தகுதியானவர் இல்லை என கூறியுள்ளார்.
இது குறித்து கபில்தேவ் கூறுகையில்,ம் “ஹர்த்திக் பாண்டியாவிடம் ஏராளமான திறமைகள் குவிந்து இருக்கிறது. அந்த திறமையை கேப்டவுன் டெஸ்டில் நிரூபித்தார்.
செஞ்சூரியன் டெஸ்டின் இரு இன்னிங்சில் மிகவும் கீழ்த்தரமான முறையில் ஆட்டம் இழந்தார்.ஹர்த்திக் பாண்டியா மனரீதியாக அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் இதே தவறுகளை அவர் தொடர்ந்து செய்தால் என்னுடன் ஒப்பிடுவதற்கு தகுதியானவர் இல்லை” எனவும் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.