தினகரனை திணறடிக்க பிப். 24-ல் மன்னார்குடியில் பொதுக்கூட்டத்துக்கு திவாகரன் திகுதிகு ஏற்பாடு
ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி மன்னார்குடிக்குத் தொண்டர்களை வரச் சொல்லி அண்ணா திராவிடர் கழகத்தில் இருந்து உத்தரவு சென்றிருக்கிறது. அந்தநாளில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி தினகரனைத் திணற வைக்கப் போகிறாராம் திவாகரன்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அதிமுகவோடு கைகுலுக்கிவிட்டு, தஞ்சாவூர் தொகுதியைப் பெற வேண்டும் எனத் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார் திவாகரன். அண்ணா திராவிடர் கழகத்தைத் தொடங்கிய நாள் முதலாக இதுவரையில் ஒரு பொதுக்கூட்டத்தைக் கூட அவர் நடத்தவில்லை.
மாநிலம் முழுக்க நிர்வாகிகளை மட்டுமே நியமித்திருக்கிறார். அவர்களுடைய எதிர்காலத்துக்காக அதிமுகவில் ஐக்கியமாக வேண்டும் என நினைக்கிறார்.
'நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. நம்முடைய பலத்துக்கு ஏற்ப தஞ்சாவூர் தொகுதியை நமக்கு ஒதுக்குவார்கள்' என அ.தி.க பொறுப்பாளர்கள் பேசி வருகிறார்கள்.
பொதுக்கூட்டங்களில் தினகரனுக்குச் சேரக் கூடிய கூட்டத்தைவிடவும் பல மடங்கு கூட்டத்தை மன்னையில் திரட்டத் திட்டமிட்டிருக்கிறாராம் திவாகரன்.
அருள் திலீபன்