கொல்கத்தா பாணியில் 10 மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் மெகா பொதுக்கூட்டம் - சந்திரபாபுநாயுடு புது ஐடியா!
கொல்கத்தா பாணியில் 10 மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் மெகா பொதுக் கூட்டங்களை நடத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மெகா கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார். கொல்கத்காவில் மம்தா ஏற்பாட்டில் நடந்த மெகா பொதுக் கூட்டத்தில் 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று மாபெரும் வெற்றி பெற்றது.
இதே போன்ற அடுத்தடுத்து, பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் வலிமையாக உள்ள ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, பீகார், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், உ.பி, அசாம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொல்கத்தா பாணியில் பிரம்மாண்ட பொதுக் கூட்டங்களை நடத்த சந்திரபாபு நாயுடு திட்டம் தீட்டியுள்ளார். முதல் பொதுக் கூட்டத்தை பிப்ரவரி இறுதிக்குள் ஆந்திராவின் அமராவதியின் பிரம்மாண்டமாக நடத்தவும் நாயுடு தயாராகிவிட்டார்.
10 மாநிலங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்க வரும் பிப்.1-ந் தேதி டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்கிறார் சந்திரபாபு .அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுலையும் தனியாகச் சந்திக்கிறார் சந்திரபாபு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அத்துடன் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரையும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சென்று சந்தித்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்த சந்தேகங்களைத் தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக அல்லாத மாநிலக் கட்சிகள் ஒன்று சேர்ந்தால் பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்று நம்புகிறார் சந்திரபாபு .அதனால் இப்பொழுதே அதற்கான பணிகளில் மும்முரமாகி விட்டார்.