அமெரிக்காவில் தமிழுக்கு கிடைத்த பெருமை - ஜனவரியை தமிழ்க் கலாச்சார மாதமாக பிரகடனம் செய்த வடக்கு கரோலினா ஆளுநர்!
தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமைப்படுத்தும் வகையில் ஜனவரி முழுவதும் தமிழ் மொழி, மற்றும் கலாச்சார மாத மாக அனுசரிக்கப்படும் என அமெரிக்காவின் வடக்கு கரோலினா ஆளுநர் பிரகடனம் செய்துள்ளார்.
அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான வடக்கு கரோலினாவில் தமிழர்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். அங்கும் தைப்பொங்கல் திருவிழாவை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தமிழ்,தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாட்டை அமெரிக்காவிலும் பெருமைப்படுத்தும் வகையில் தை மாதத்தை தமிழ்ப் பண்பாட்டு மாதமாக அறிவிக்கக் கோரி அமெரிக்க தமிழ்ச் சங்கத்தினர் வடக்கு கரோலினா கவர்னரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை ஏற்று ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் கலாச்சார மாதமாக பிரகடனம் செய்துள்ளார் வடக்கு கரோலினா கவர்னர் ராய் கூப்பர். இதுகுறித்து சந்தோசமாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், உலகில் இன்றளவும் எழுதப்படும், பேசப்படும் பழமையான மொழி தமிழ் தான். இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா,சிங்கப்பூர், இலங்கை என பல்வேறு வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் மொழிதான் அடையாளம்.
அமெரிக்காவின் வரலாற்று சிறப்புமிக்க தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் வடக்கு கரோலினாவில் வசிக்கும் தமிழர்கள் வளர்த்தெடுத்து வருவது பெருமைக்குரியது. இங்கும் தமிழ்ப்பள்ளிகள் அமைத்து இளைய தலைமுறைக்கு தமிழ்க் கலாச்சாரம், பாரம்பர்யம், பண்பாட்டை பேணிக் காக்க எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டு க்குரியது. ஜனவரி மாதம் முழுவதையும் தமிழர்களுடன் இணைந்து இங்குள்ள அனைவரும் தைப்பொங்கலை உற்சாகமாக கொண்டாடுவோம் என்று ராய் கூப்பர் தெரிவித்துள்ளார்.