ஸ்டிரைக்கும் வேணாம், போராட்டமும் இல்லை- பள்ளிகளில் ஆஜரான ஆசிரியர்கள்!

அரசின் கெடுபிடிகளுக்குப் பயந்து போராட்டம் நடத்திய ஆசிரியர்களில் பெரும்பாலானோர் இன்று பள்ளிகளுக்கு திரும்பி விட்டதால் வகுப்புகளில் வழக்கம் போல் பாடங்கள் நடத்தப்படுகிறது.

மாணவர்களும் பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எட்டு நாட்களாக தீவிரமாக நடந்து வந்த ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் போராட்டம் பிசுபிசுத்தது.கைது, சஸ்பென்ட் நடவடிக்கைகளால் அதிர்ந்து போன ஆசிரியர்களுக்கு உயர்நீதிமன்றமும் கைவிரித்து விட்டது.

இனியும் பணிக்கு வராவிட்டால் அவ்வளவுதான்... சம்பளம் இல்லை... வேலை இல்லை என எச்சரிக்கை விடுத்த அரசு, ஒரே நாள் தான் அவகாசம் வந்து விடுங்கள் என்று நேற்று அறிவித்தது தான் தாமதம். முதலில் ஆசிரியைகள் போராட்ட த்தில் இருந்து நழுவினர். பின்னர் வேறு வழியின்றி ஒட்டு மொத்த ஆசிரியர்களும் மளமளவென பள்ளிகளுக்கு படையெடுத்து விட்டனர்.

போராட்டங்களை முன்னெடுத்து நடத்திய ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் நிர்வாகிகள் பணிக்குச் செல்லவில்லை. இதனால் இன்று காலையில் 99% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளில் வழக்கம் போல் பாடம் நடத்தப்படுவதால் மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More News >>