சபரிமலைக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்த எஸ்.பி யாதீஷ் சந்திரா திருமண விழாவில் ஆடிய நடனம் - வைரல் வீடியோ
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சபரிமலைக்குச் சென்ற மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்த எஸ்.பி யாதீஷ் சந்திரா திருமண விழா ஒன்றில் ஆடிய நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகு இந்து அமைப்புகள், பாஜக, காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் சபரிமலை மகரவிளக்கு சீசனின்போது பக்தர்கள் குவிந்தனர். இதனால் அங்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விதித்தனர்.
ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு கடுமையான கெடுபிடிகள் இருந்தன. அப்போது மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்றிருந்தார். அப்போது நிலக்கல் பகுதியில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.பி யாதீஷ் பொன்ராதாகிருஷ்ணன் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இதை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. எஸ்.பி யாதீஷ் சந்திராவின் வாக்குவாதம் சரிதான் என்று கேரள அரசு அறிவித்தாலும் பின்னர் அவரை வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.
எஸ்.பி யாதீஷ் சந்திரா பொன்ராதாகிருஷ்ணன் உடன் வாக்குவாதம் செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. எஸ்.பி யாதீஷ் குறித்து பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்சூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடியுடன் எடுத்த எஸ்.பி யாதீஷ் சந்திரனின் புகைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரல் ஆனது.இந்நிலையில் எஸ்.பி யாதீஷ் சந்திரனின் உறவினர் வீட்டுத்திருமணம் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடைபெற்றது.
அந்த திருமணத்தில் கலந்து கொண்ட எஸ்.பி யாதீஷ் வேட்டி சட்டையுடன் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் முக்கிய தொழிலதிபரான கே.எஸ்.பிரசாத் பணிக்கர் என்பவரின் மகன்களின் திருமண நிகழ்வில் மலையாளம் மற்றும் கன்னட திரையுலகினர் மற்றும் முன்னணி அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர். எஸ்.பி யாதீஷ் ஆடிய நடனம் இவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நடனம் முடிந்ததும் எஸ்.பி யாதீஷை சூழ்ந்து கொண்ட மக்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
எஸ்.பி யாதீஷ்ஷின் இந்த நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.