எனக்கு எதிராக அரசியல் சதி - பேராசிரியை நிர்மலாதேவி பரபரப்பு புகார்!

தமக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்படுவதற்கு அரசியல் சதியே காரணம் என பாலியல் வழக்கில் சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா குற்றம் சாட்டியுள்ளார்.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த குற்றச்சாட்டில் அருப்புக்கோட்டை கல்லூரிப் பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். பல முறை ஜாமீன் கேட்டும் நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து 3 பேர் மீதும் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. கருப்பசாமி, முருகன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக நிர்மலாதேவி வாக்குமூலம் கொடுத்துள்ளார் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது

இன்று இவ்வழக்கு விசாரணை தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆஜராகினர். மூவருக்கும் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது.

நீதிமன்றத்திற்கு வெளியில் வந்த நிர்மலாதேவி,முதல் முறையாக இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தம்மிடம் சிபிசிஐடி போலீசார் மிரட்டி வாக்குமூலம் பெற்றதாகவும், ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்படுவதன் பின்னணியில் அரசியல் சதி உள்ளதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்தார்.நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனும் இதே குற்றச்சாட்டை வைத்ததுடன் சில தமிழக அமைச்சர்களுகளும் பின்னணியில் உள்ளதாகவும் பகீர் தகவலை வெளியிட்டார்.

இதுவரை வழக்குத் தொடர்பாக மீடியாக்களிடம் தொடர்ந்து மவுனம் சாதித்த நிர்மலாதேவி இப்போது அரசியல் சதி என்று கூறியுள்ளார்.இதனால் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது.

More News >>