ஒரே ஓவரில் 37 ரன்கள் - தென் ஆப்பிரிக்க வீரர் அபார சாதனை!
ஒரே ஓவரில் 37 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்க வீரர் ஜேபி டுமினி அபார சாதனைப் படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் மொமண்டன் ஒன் டே என்ற முதல்தர கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கேப் கோப்ராஸ் அணியும் நைட்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கேப் கோப்ராஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய நைட்ஸ் அணி 37 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது. இதில் அதிகப்பட்சமாக டுமினி 37 பந்துகளில் 70 ரன்களும், டெம்பா பவுமா மற்றும் சிமோன் கோமாரி ஆகியோர் தலா 65 ரன்களும் எடுத்தனர்.
இந்த போட்டியின் 36ஆவது ஓவரை எட்டீ லீயி வீசினார். இந்த ஓவரில் டுமினி 37 ரன்கள் விளாசினார். முதல் நான்கு பந்துகளில் 4 சிக்ஸர்கள் விளாசினார். ஐந்தாவது பந்தில் 2 ரன்கள் எடுத்தார். ஆறாவது பந்து நோ-பாலாக வீச அதை பவுண்டரிக்கு விளாசினார். நோ-பால் வகையில் ஒரு ரன்கள் கிடைக்க ஐந்து பந்துகளில் மொத்தம் 31 ரன்கள் ஆனது.
ஆனால், கடைசி பந்தையும் டுமினி சிக்ஸருக்கு விளாச ஒரு ஒவரில் அணிக்கு 37 ரன்களும், தனிப்பட்ட முறையில் 36 ரன்களும் எடுத்து அபார சாதனை படைத்தார். முன்னதாக, தென் ஆப்பிரிக்க வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் 2007 உலகக்கோப்பையில் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்திருந்தார்.
ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகப்பட்ச ஸ்கோர் இது. இதற்கு முன்னதாக, 2013ஆம் ஆண்டு ஜிம்பாப்வே வீரர் எல்டன் சிகும்பரா, வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஒரு ஓவரில் 39 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கூறியுள்ள டுமினி, “எல்லா நாட்களிலும் இது போன்ற வாய்ப்புகள் கிடைக்காது. நான் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடிக்க வேண்டும் என்று முயற்சி செய்திருந்தேன். ஆனால், இது போனஸ் புள்ளிக்காக செய்ய நினைத்திருந்தேன். நான் ஸ்கோர் போர்டை பார்த்தபோது, 4 ஓவர்களில் 35 ரன்கள் எடுத்தால் போனஸ் புள்ளிகள் கிடைக்கும் என இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.