காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் - ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு!

அரசு ஊழியர், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக ஜாக் டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ந்தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். மறியல், ஆர்ப்பாட்டம் என பல கட்டப் போராட்டங்களை நடத்தியும் அரசு கண்டு கொள்ளவில்லை. சமரச பேச்சுவார்த்தைக்கும் அரசு தயாராக இல்லை.

போராட்டத்தை ஒடுக்கும் வகையில் கைது, சஸ்பென்ட், தற்காலிகமாக புதிய ஆசிரியர்கள் நியமனம் என அதிரடி நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது. பணிக்குத் திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவகாசம் கொடுத்து எச்சரிக்கையும் விடுத்தது. இதனால் இன்று பெரும்பாலான ஆசிரியர்களும், ஊழியர்களும் பணிக்குத் திரும்பினர். இதனால் போராட்டம் பிசுபிசுக்கும் நிலைக்குச் சென்றது.

இந்நிலையில் அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து ஜாக்டோ-ஜியோ மாநில நிர்வாகிகள் சென்னையில் அவசரமாக கூடி ஆலோசித்தனர். இதில் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக முடிவு எடுக்கப்ட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஜாக் டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், சுப்பிரமணியன் ஆகியோர் கூறுகையில், எங்கள் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தக் கூட நடத்தக் கூட முதல்வருக்கு மனமில்லை. அவருக்கு முட்டுக்கட்டை போடுவது யார் என்றும் தெரியவில்லை. மாணவர்களின், பொதுமக்களின் நலன் கருதியும், நீதிமன்ற அறிவுறுத்தல், தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுகிறோம். எங்களுடைய கோரிக்கைகள் அப்படியேதான் உள்ளது. அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் விவாதிப்போம் என்றனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது எடுக்கப்பட்ட கைது, வழக்கு, சஸ்பெண்ட் நடவடிக்கைகளை அரசு திரும்பப் பெற வேண்டும். போராட்டத்தில் பங்கேற்ற ஒருவருக்குக் கூட பாதிப்பு இருக்கக் கூடாது என்பதில் ஜாக் டோ-ஜியோ உறுதியாக செயல்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

More News >>