என்ன இது கீழ்த்தரமான அரசியல்?- ராகுலை வறுத்தெடுத்த கோவா முதல்வரின் கடிதம்!
உடல்நலம் இல்லாத தம்மை மனதில் கெட்ட நோக்கத்துடன் நல்ல பிள்ளை போல் நலம் விசாரிக்க வந்துள்ளார் என ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை திடீரென ராகுல்காந்தி சந்தித்தது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. பாரிக் கரை சந்தித்தது குறித்து ராகுல்காந்தி டிவிட்டரில், பாரிக்கரைச் சந்தித்தேன், விரைவில் குணமடைய வாழ்த்தினேன் என்று நேற்று பிற்பகல் பதிவிட்டிருந்தார். மாலையில், கேரளாவில் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில், பாரிக்கரைச் சந்தித்த போது ரபேல் இறுதிக்கட்ட ஒப்பந்தம் குறித்து தமக்கு எதுவுமே தெரியாது என்று பாரிக்கர் கூறியதாக ராகுல் பேசியது சர்ச்சையானது.
இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்திக்கு காரசாரமாக கடிதம் எழுதியுள்ளார் கோவா முதல்வர் பாரிக்கர் . முன் அறிவிப்பு ஏதுமின்றி திடீரென வந்ததால் ஆச்சர்யப்பட்டேன். அரசியலில் எதிரியாக இருந்தாலும் உடல்நலம் பற்றி விசாரிப்பது என்ற நல்ல பண்பு, நாகரீகம் நாட்டில் இன்னும் உள்ளது என்று கருதினேன். உடல்நலம் குன்றி உயிருக்கு போராடும் நிலையிலும் மனவலிமையுடன் கோவா மக்களுக்காக போராடி வருகிறேன். தாங்கள் போன்றவர்களின் ஆசிர்வாதமும் அதற்கு பக்கபலமாக இருக்கிறது என்றும் நம்பினேன்.
ஆனால் ஏதோ கெட்ட நோக்கத்துடன், கீழ்த்தரமான அரசியலுக்காகவே வந்துள்ளீர்கள் என்பது இப்போது தான் தெரிகிறது. என்னுடன் 10 நிமிடம் நடந்த சந்திப்பில் ரபேல் குறித்த வார்த்தையே உச்சரிக்கப்படாத போது நடைபெறாத ஒன்றை கூறியுள்ளது பெரும் மனவேதனையைத் தருகிறது. இனிமேலாவது உயிருக்குப் போராடும் நிலையில் உள்ள என்னைப் போன்றவர்களிடம் இந்த மாதிரி மட்டமான அரசியலை அரசியலை நடத்தாதீர்கள். ரபேல் விவகாரத்தில் இப்போதும் சொல்கிறேன்... எப்போதும் சொல்வேன்... எல்லாமே முறையாகத்தான் நடந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று உறுதியாகக் கூறுகிறேன். நீங்களும் நமது சந்திப்பில் என்ன நடந்தது என்ற உண்மையைத் தெரிவிக்க வேண்டும் என்று மனோகர் பாரிக்கர் கடிதத்தில் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.