சட்ட விரோத குடியேற்றம் - இந்திய மாணவர்கள் 600 பேரை பொறி வைத்து பிடித்த அமெரிக்கா!
அமெரிக்காவில் போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக குடியேறிய இந்திய மாணவர்கள் 600 பேரை பொறி வைத்து நூதன முறையில் சிக்க வைத்துள்ளது அமெரிக்க போலீஸ்.
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாணவர்கள் போர்வையில் ஏராளமானோர் போலி ஆவணங்கள் மூலம் குடியேறுகின்றனர்.
இதற்கு ரகசியமாக சில ஏஜன்டுகளும் உதவி புரிகின்றனர்.இவர்களைப் பிடிக்க அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு போலீஸ் நூதன தந்திரத்தை பயன்படுத்தியது.
மிக்சிகன் மாகாணத்தில் பர்மிங்டன் ஹில்ஸ் பகுதியில் தாமே ஒரு போலியான பல்கலைக்கழகத்தை உருவாக்கி விளம்பரப்படுத்தியது.இந்த போலி பல்கலைக்கழகத்தை உண்மை என நம்பி இந்தியாவில் குறிப்பாக ஆந்திராவைச் சேர்ந்த மாணவர்களை போலியான ஆவணங்கள் மூலம் சேர்க்க முயன்ற 8 ஏஜன்டுகள் போலீசில் சிக்கினர்.
ஏஜன்டுகளிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் அமெரிக்கா முழுவதும் ஆந்திராவைச் சேர்ந்த 600 மாணவர்கள் சட்டவிரோதமாக குடியேறி இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.
இதுவரை 100 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய மாணவர்களுக்கும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தேடி வருகின்றனர். அமெரிக்க போலீசின் அதிரடி நடவடிக்கையால் சட்டவிரோதமாக தஞ்சமடைந்த ஆந்திர மாணவர்கள், அமெரிக்க தெலுங்கு சங்கத்தினரின் உதவியை நாடினர்.இதைத் தொடர்ந்து ஆந்திர மாணவர்களை காப்பாற்றுமாறு அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷவர்தன் சிங்க்லா, துணைத் தூதரக அதிகாரி ஸ்வாதி விஜய் குல்கர்னி ஆகியோரிடம் தெலுங்கு சங்க நிர்வாகிகள் முறையிட்டுள்ளனர்.