சிபிஐ தற்காலிக இயக்குநருக்கு எதிரான வழக்கு - விசாரிக்க மறுத்து 3-வது நீதிபதியும் விலகல்!

சிபிஐ இயக்குநர் பதவி சர்ச்சை முடிந்த பாடில்லை ... நாகேஸ்வரராவை தற்காலிகமாக சிபிஐ இயக்குநராக நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையிலிருந்து விலகுவதாக 3-வது நீதிபதியும் அறிவித்துள்ளார்.

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா முதலில் விடுப்பில் அனுப்பப் Uட்டார். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் இயக்குநர் பதவியில் அமர்ந்தார். ஆனால் உடனடியாக சிபிஐ இயக்குநர் பதவியை பறித்து தீயணைப்பு துறைக்கு மாறுதல் செய்தது பிரதமர் மோடி தலைமையிலான சிறப்புக் குழு .

தொடர்ந்து சிபிஐயின் தற்காலிக இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். நாகேஸ்வர ராவ் நியமனம் செல்லாது என உச்சநீதிமன்றத்தில் பொதுநலவழக்கை என்.ஜி.ஓ அமைப்பு ஒன்று தொடர்ந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. புதிய இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் தாம் இருப்பதை காரணம் காட்டி வழக்கை தமக்கு அடுத்த நீதிபதியான ஏ.கே.சிக்ரியை விசாரிக்குமாறு கூறினார்.

ஏ.கே.சிக்ரியும் எவ்வித காரணமும் கூறாமல் தாமும் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று விலகிவிட நீதிபதி ரமணா விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று தாமும் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என நீதிபதி ரமணா விலகியுள்ளார். இதற்கு ரமணா சொன்ன காரணம், சிபிஐ தற்காலிக இயக்குநர் நாகேஸ்வரராவின் மகள் திருமணத்தில் பங்கேற்றது தானாம்.

அலோக் வர்மா இடத்தில் புதிய சிபிஐ இயக்குநர் தேர்வு செய்வதில் பிரதமர் மோடி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகிய 3 பேர் குழுவில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் இழுபறியாக உள்ளது. இந்நிலையில் நாகேஸ்வரராவை தற்காலிகமாக நியமித்ததை எதிர்க்கும் வழக்கை விசாரிப்பதில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் அடுத்தடுத்து விலகியது சர்ச்சையாகி உள்ளது.

More News >>