கூட்டணிக்கு டிமிக்கி கொடுக்கும் பாமக- தருமபுரியில் அன்புமணியை வீழ்த்த முல்லைவேந்தன்? ஈரோட்டில் முத்துசாமி? ஸ்டாலின் வியூகம்
லோக்சபா தேர்தலையொட்டி, வெற்றி தோல்வி கணக்குகளைப் போட்டு வருகிறது திமுக. இந்தத் தேர்தலில் தினகரன் தனித்துப் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், வடக்கு மாவட்டங்களில் பாமக ஓட்டுக்களை கணிசமான அளவுக்குத் தினகரன் பிரிப்பார் என திமுக நினைக்கிறது.
அதாவது, விஜயகாந்த் செய்த வேலையை தினகரன் செய்வாராம். அதேபோல் கொங்கு மண்டலத்தில் ஐந்து தொகுதிளை பிரச்னைக்குரிய தொகுதிகளாக பார்க்கிறார்கள்.
அங்கும் முத்துச்சாமி உள்ளிட்ட கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த செல்வாக்குள்ளவர்களைக் களமிறக்கத் திட்டமிட்டிருக்கிறார் ஸ்டாலின். தருமபுரியில் முல்லைவேந்தன் நிறுத்தப்பட்டால், அன்புமணிக்கு வெற்றி வாய்ப்பு வந்து சேராது எனவும் திட்டம் தீட்டியுள்ளனர்.
அதிமுக, பாமக ஓட்டுக்களை தினகரன் பிரிக்கும்போது, திமுக வெற்றி பெற்றுவிடும் என நம்புகின்றனர். வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் சமூகரீதியாகவும் பணபலத்தோடும் செல்வாக்காக வலம் வரும் வேட்பாளர்களைக் களமிறக்குவதுதான் திமுகவின் நோக்கமாக இருக்கிறது.
கருத்துக்கணிப்பின்படி கொங்கு மண்டலத்தில் 5 தொகுதிகள்தான் பிரச்னை. அதையும் சரிசெய்வோம்' என நம்பிக்கையாக உள்ளனர். திமுகவின் இந்தக் கணக்குகள் சரியாகுமா எனப் பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள் திமுக புள்ளிகள்.
-அருள் திலீபன்