குரு பிறந்த நாள்... காடுவெட்டியில் பதற்றம்... பாமகவுக்கு எதிராக புதிய கட்சி உதயம்?
வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த மறைந்த காடுவெட்டி குருவின் பிறந்த தினம் நாளை (பிப்ரவரி1) கொண்டாடப்படுகிறது. காடுவெட்டி கிராமத்தில் பாமகவினர் இதற்கான ஏற்பாடு செய்துள்ளனர். அதேநேரத்தில் ராமதாஸுக்கு எதிரான குருவின் உறவினர்கள் காடுவெட்டிக்குள் நுழையவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
(கோப்பு படம்: காடுவெட்டி குருவுடன் வழுவூர் மணி)
காடுவெட்டி குரு கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். மறைந்த குருவின் பிறந்த நாள் விழா நாளை காடுவெட்டியில் பா.ம.க மற்றும் அவரது குடும்பத்தினரால் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் இவ்விழாவில் நாகை மாவட்டம் வழுவூர் கிராமத்தை சேர்ந்த மணி என்கிற மணிகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக் கூறி அவர்கள் காடுவெட்டிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாமகவில் இருந்து வழுவூர் மணி நீக்கப்பட்டார். அதனால் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸை கடுமையாக விமர்சனமும் செய்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன் மயிலாடுதுறையில் நடைபெற்ற காடுவெட்டி குருவின் இரங்கல் நிகழ்ச்சியில் குருவின் பிறந்த தினமான பிப்ரவரி 1 ந்தேதி காடுவெட்டி கிராமத்தில் பாமகவுக்கு எதிராக புதிய கட்சி துவங்கப்படும் என வி.ஜி.கே மணி அறிவித்திருந்தார். இதனால் அரியலூர் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது.
-எழில் பிரதீபன்