இளையராஜா பாராட்டு விழாவுக்கு தடை கிடையாது - உயர் நீதிமன்றம் உத்தரவு!
இளையராஜா பாராட்டு நிகழ்ச்சிக்கு தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இசைஞானி இளையராஜா மொத்தம் ஆயிரம் திரைப்படங்களுக்கு அதிகமாக இசையமைத்துள்ளார். இதனால் அவரை கௌரவப்படுத்த முடிவெடுத்த தமிழ் தயாரிப்பாளர் சங்கம் `இளையராஜா 75' என்ற பெயரில் அவருக்கு பாராட்டு விழா நடத்த தீர்மானித்துள்ளது. அதன்படி நாளை மறுநாள் அந்தப் பாராட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கு பெறுகின்றனர். இதற்கிடையே, இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். சங்கத்தின் முறையான அனுமதி பெறாமல், கலந்தாலோசிக்காமல் விழா நடக்கிறது என குற்றம் சாட்டினார்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த தயாரிப்பாளர் சங்கம், ``தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு வீடு கட்டித்தர நிதி திரட்டும் நோக்கிலேயே இளையராஜா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்கான முடிவு 2016-ம் சங்கத்தில் எடுக்கப்பட்டது. அனைத்து உறுப்பினர்களையும் கலந்தாலோசித்துதான் இளையராஜா 75 நிகழ்ச்சி குறித்து முடிவெடுக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்து இருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. அப்போது, ``’இளையராஜா 75’ விழாவை தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்த தடையில்லை. கணக்கு வழக்குகளை மார்ச் 3ம் தேதி பொதுக்குழுவில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டு தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.