ஜெயலலிதாவுக்கு விஜயபாஸ்கர் எழுதிய டாப் சீக்ரெட் கடிதம் - சிபிஎம் கண்டனம்
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் லஞ்சம் தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் குட்கா, பான்மசாலா நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த ஆண்டு நடத்திய சோதனைகளில் ரூ.250 கோடி அளவிற்கு சட்ட விரோதமாக குட்கா வர்த்தகம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பல அதிகாரிகள் லஞ்சம் பெற்ற விபரங்கள் வெளியாகின. தற்போது, போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த வருமான வரி சோதனையில் டி.ஜி.பி, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய டாப் சீக்ரெட் கடிதம் எடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் லஞ்சம் தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை ஆணையர்களாக பணியாற்றியவர்களும் லஞ்சம் பெற்றதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ள நிலையில் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருர் பதவி விலக வேண்டும் அல்லது தமிழக முதலமைச்சர், அமைச்சரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.