காங்கிரசின் திட்டங்களை காப்பியடித்ததற்கு நன்றி - பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் கிண்டல்!

ஏழைகளுக்கான முன்னுரிமை வழங்கும் காங்கிரசின் முந்தைய திட்டங்களை காப்பியடித்த பாஜகவுக்கு நன்றி என மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம் கருத்து தெரிவிக்கையில், இந்த பட்ஜெட் வரவு செலவுக்கானது அல்ல. ஓட்டுக்கான பட்ஜெட் என்றார். மேலும் முந்தைய காங்கிரஸ் அரசு ஏழைகளுக்காக கொண்டு வந்த பல திட்டங்களை காப்பியடித்துள்ளதற்கு பியூஸ் கோயலுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ, 5 ஆண்டு காலத்தில் நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்று விட்டது என்று பாஜகவை விமர்சித்துள்ளார். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6 ஆயிரம் என்றால் ஒரு நாளைக்கு 17 ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும். விவசாயிகளை இழிவுபடுத்துகிறது மோடி அரசு என ராகுல் விமர்சித்துள்ளார்.

மாநிலங்களவை திமுக எம்.பி கனிமொழி கூறுகையில், குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது போல் பட்ஜெட் உள்ளது.ஆட்சியின் கடைசிக்காலத்தை சிறப்பாக முடிக்க வேண்டும் என பாஜக எண்ணுகிறது. ஆனால் காலம் கடந்து விட்டது என்று கனிமொழி கூறியுள்ளார்.

பட்ஜெட்டை முதன் முறையாக தாக்கல் செய்த நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல், பாஜக அரசின் வெற்றிப் பயணத்திற்கான பட்ஜெட் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

More News >>