சுதா சேஷய்யன் கட்டுரையால் சர்ச்சை, சுதா சேஷய்யன் கட்டுரைக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு
மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் சுதா சேஷய்யன், பிரபஞ்சத்தின் படைப்புக் கோட்பாடுகளை ஆதரிப்பது எப்படி சரியாக இருக்கும் எனக் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறது மருத்துவர்கள் சங்கம் ஒன்று. சுதா சேஷய்யனின் கட்டுரையை மையமாக வைத்தே இந்தக் கேள்விகளை எழுப்பிகின்றனர்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக சமீபத்தில் பதவிக்கு வந்தார் டாக்டர்.சுதா சேஷய்யன். இவர் கடந்த பல வருடங்களாக பக்தி தொடர்பாகப் பல்வேறு கட்டுரைகளை எழுதி வருகிறார்.
அந்த வகையில் பொருநை போற்றுதும் என்ற தலைப்பில் இன்று வெளிவந்த நாளேட்டில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரைக்கு வினையாற்றியிருக்கிறது சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கம்.
அதன் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் எழுதியுள்ள ஃபேஸ்புக் பதிவில், 'மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி என்பது மிக உயரிய பதவி. ஒரு மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் என்பவர் அறிவியல் மனப்பான்மை உள்ளவராக இருத்தல் வேண்டும்.
ஒவ்வொரு பொருள் குறித்தும் அறிவியல் ரீதியான பார்வையை, ஆராய்ச்சியை ஊக்கப்படுத்த வேண்டும். டாக்டர் சுதா சேஷய்யன் அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த மரியாதை உண்டு. ஆனால்,அவர் தொடர்ந்து அறிவியலுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவது மிகவும் வருத்தமாக உள்ளது.
ஒரு அறிவியல் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், உயிரினங்கள் மற்றும் பிரபஞ்ச படைப்பு கோட்பாட்டை ஆதரிப்பது எவ்வாறு சரியாகும்?
அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ,உயிரினங்களின் பரிணாமக் கோட்பாட்டை மறுதலிப்பது,மருத்துவ அறிவியலுக்கே எதிரானதல்லவா? வழிபாட்டுத்தலங்களுக்குச் சென்றால் நோய்கள் குணமாகும் என்பதையெல்லாம் எவ்வாறு அவரால் ஆதரிக்க முடிகிறது?
பிறகு ஏன் மருத்துவமனைகள்? மருத்துவர்கள்? செவிலியர்கள்? மருந்துகள்? மருத்துவப் பல்கலைக் கழகங்கள்?துணைவேந்தர்கள்? மீன்களுக்கு தீங்கிழைத்தால் கண்பார்வை போய்விடும் என்பது சரியா? என்பதையெல்லாம் ஆராய வேண்டாமா? அப்படி ஒரு நம்பிக்கை நிலவுகிறது என்றால் அதை தவறு எனக் குறிப்பிடாமல் ,அக்கருத்தை மறைமுகமாக வலுப்படுத்தும் நோக்குடன் பதிவிடலாமா? ஒரு மருத்துவப் பல்கலைக் கழக துணைவேந்தரே ,அறிவியலுக்கு புறம்பாக கருத்தை பதிவு செய்தால் ,பொதுமக்கள், மாணவர்கள், இளம் மருத்துவர்கள் மத்தியில் மூட நம்பிக்கை அதிகரிக்காதா? மருத்துவ அறிவுச் சுடரை பரப்புவதில் முன்னணியில் இருக்க வேண்டியவர் அவர். ஆன்மீகமும் அறிவியலும் ஒன்றாக பயணிக்க முடியாது என்பதற்கு இந்தக் கட்டுரை மற்றொரு உதாரணம். தவறான நம்பிக்கையா? அல்லது அறிவியலா? எந்தப் பக்கம் நிற்கப்போகிறார் நமது துணைவேந்தர்?' எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
- அருள் திலீபன்