சின்னத்தம்பியை கும்கி ஆக்குகிறார்கள்! கலங்கும் வன ஆர்வலர்கள்

கோவையில் இருந்து வால்பாறை டாப்ஸ்லிப் வனப்பகுதிக்குக் கடத்தப்பட்ட சின்னத்தம்பி யானை, பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி கிராமத்துக்குள் வலம் வந்து கொண்டிருக்கிறது. மதுக்கரை மகாராஜா யானையை கும்கியாக மாற்றியது போல, சின்னத்தம்பியை மாற்றப் பார்க்கிறார்கள் எனக் கூக்குரல் எழுப்புகின்றனர் வன ஆர்வலர்கள்.

கோவை மாவட்டத்தில் உள்ள சின்ன தடாகம், ஆனைக்கட்டி பகுதிகளில் சுற்றிவந்த விநாயகன் மற்றும் சின்னத்தம்பி யானைகளை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யவேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதற்குப் பழங்குடி மக்களும் பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த எதிர்ப்பையும் மீறி விநாயகன் மற்றும் சின்னத்தம்பி ஆகிய யானைகளைப் பிடித்தனர். இதில் விநாயகன் யானையை முதுமலைப் பகுதியில் விட்ட நிலையில், சின்னத்தம்பி யானையை டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதியில் விட்டனர்.

குடும்பத்தை விட்டுப் பிரிந்து, தந்தம் உடைந்து, ரத்தக் காயங்களுடன் இடமாற்றம் செய்யப்பட்டதால், சின்னத்தம்பி யானையை மீண்டும் தடாகம் பகுதியிலேயே விட வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், பொள்ளாச்சியை அடுத்த, அங்கலக்குறிச்சி என்ற கிராமத்துக்குள் நேற்று சின்னத்தம்பி யானை நுழைந்தது.

இதைத் தொடர்ந்து, பட்டாசுகளை வீசி, சின்னத்தம்பியை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள வன ஆர்வலர் சந்திரசேகர், ` மதுக்கரை மகாராஜா யானையை கும்கி ஆக்க திட்டம் செய்தது போல். மறுபடியும் சின்னதம்பி என்று அன்பாக அழைக்கப்படும் யானையை கும்கி ஆக்க வனத்துறை முடிவு செய்து உள்ளதாகத் தகவல் வருகிறது.

மக்களின் உணர்வுகளுக்கு மாறாக வனத்துறை செயல்படுகிறது' எனக் கோபத்தை வெளிக்காட்டியிருக்கிறார்.

-எழில் பிரதீபன்

More News >>