வானதிக்கு வாக்கு கொடுத்த கொங்கு அமைச்சர்... நப்பாசையில் திருப்பூருக்கு தூண்டில் போடும் தமிழிசை!
அதிமுக கூட்டணி முடிவாகாததால் தமிழிசையைப் போலவே பெரும் பதற்றத்தில் இருக்கிறார் வானதி சீனிவாசன். கடந்த 2 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் நலத்திட்டப் பணிகள் என்ற பெயரில், அடிக்கடி உலா வருகிறார்.
அமைச்சர்களின் அதிரடி பேச்சுகளால் கூட்டணி முறிந்து போய்விடக் கூடாது எனக் கலக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது வேதனையை அறிந்த உள்ளூர் மந்திரி, ' கோவை மாவட்டத்தை உங்களுக்காக ஒதுக்குவார்கள். அதிக வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். எங்களால் முடிந்த உதவிகளைச் செய்வோம்' என நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.
இதற்கு அடிப்படையான காரணம், சட்டமன்றத் தேர்தலில் தான் பிறந்த சொந்தத் தொகுதியான தொண்டாமுத்தூரில் போட்டியிடாமல் தொகுதி மாறிப் போட்டியிட்டார் வானதி. தொண்டாமுத்தூரில் உள்ளூர் அமைச்சர் நிற்பதால், அவருக்கு வழிவிடும் வகையிலேயே தொகுதி மாறினார் வானதி.
அந்த நன்றிக்கடனுக்காகத்தான் இந்த வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறாராம். பிஜேபிக்குச் செல்வாக்கு உள்ள மாவட்டங்களாக கோவையையும் கன்னியாகுமரியையும் பார்க்கிறார்கள். இந்த இரண்டு இடங்களிலும் உறுதியாக வெல்ல வேண்டும் என்பதால் பாஜகவினர் கடுமையாக உழைத்து வருகின்றனர்.
வானதியை ஜெயிக்க வைக்க உள்ளூர் மந்திரி இருப்பதால், அதிமுக கூட்டணி அமைந்தால் திருப்பூர் தொகுதியைக் கேட்டு வாங்கி ஜெயிக்கலாம் என மனக்கோட்டை வருகிறார் தமிழிசை.
-எழில் பிரதீபன்