சிபிஐ இயக்குநரை நியமிப்பதில் தாமதம் ஏன்?- மத்தியஅரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!

புதிதாக சிபிஐ இயக்குநரை நியமிக்க தாமதம் செய்வது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா மீது மத்திய அரசு கை வைத்தது முதலே சர்ச்சைகள் சுற்றிச் சுற்றி எழுகின்றன. தம்மை விடுப்பில் அனுப்பியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் பதவியில் அமர்ந்தார் அலோக் வர்மா. ஆனால் இரண்டாவது நாளே அவரை தீயணைப்புத் துறைக்கு தூக்கியடித்தது மத்திய அரசு .கடைசியில் வேலையே வேண்டாம் என்று அலோக் வர்மா ராஜினாமா செய்து விட்டு போய் விட்டார்.

சிபிஐ இயக்குநர் பொறுப்புக்கு தற்காலிகமாக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். உயர் பதவிக்கு தற்காலிக இயக்குநர் நியமனம் செல்லாது என்று கூறி பொது அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றம் சென்றது. இதனை விசாரிக்க தலைமை நீதிபதி மறுத்தார்.அதற்கடுத்து நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ரமணா ஆகியோரும் ஒதுங்கினர்.இன்று இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண்மிஸ்ரா, நவீன் சின்கா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ உயர் பொறுப்புக்கு இயக்குநரை நியமிப்பதில் மத்திய அரசுக்கு என்ன தயக்கம் என்று அட்டர்ஜி ஜெனரல் வேணுகோபாலிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.உடனடியாக நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இதற்கு பதிலளித்த வேணுகோபால், ஏற்கனவே இயக்குநரை தேர்வு செய்யும் குழு கூடி விவாதித்ததில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இன்று மாலையே பிரதமர் தலைமையிலான குழு கூடி முடிவு செய்யவுள்ளதாக தெரிவித்ததால் நீதிபதிகள் சமாதானமடைந்தனர்.

இதற்கிடையே வழக்குத் தொடர்ந்த பொது அமைப்பின் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், சிபிஐ இயக்குநர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்றார். இதற்கு நீதிபதிகள், முதலில் சிபிஐ இயக்குநரை நியமிக்கட்டும். அதன் பின் அதில் உள்ள குறைகளைக் கூறுங்கள் என்று கூறி வழக்கு விசாரணையை வரும் 6-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சிபிஐ இயக்குநர் நியமனம் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசு மீது கடும் அதிருப்தியும், கேள்வி மேல் கேள்வியும் கேட்டது பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

More News >>