போலி விசாவில் குடியேறியவர்களை வேட்டையாடும் அமெரிக்க போலீஸ் .... அலறும் இந்திய மாணவர்கள் ... உதவிக்கு இந்திய தூதரகம் தனி ஏற்பாடு!
போலி விசாவில் குடியேறியவர்களை அமெரிக்க போலீஸ் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு உதவி செய்ய அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் 24 மணிநேர சேவை மையத்தை திறந்துள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை களையெடுக்க உள்நாட்டு பாதுகாப்பு படையினர் புது யுக்தியை கையாண்டனர். பர்மிங்டன் ஹில்ஸ் பகுதியில் போலியான பல்கலைக்கழகத்தை தாங்களே உருவாக்கி கண்காணித்தனர். இதில் சில ஏஜன்சிகளின் உதவியுடன் போலியான ஆவணங்கள் மூலம் மாணவர் விசாவில் சேர்ந்து அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் தங்கியிருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து ஏஜன்டுகள் 8 பேரை கைது செய்தது அமெரிக்க போலீஸ் .
ஏஜன்டுகள் மூலம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் பட்டியலை தயாரித்து அவர்களை அமெரிக்கா முழுவதும் வேட்டையாடி வருகிறது. இதில் 600 இந்திய மாணவர்களை அடையாளம் கண்டு 130 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.
அமெரிக்க போலீசின் வேட்டையால் அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பீதியடைந்துள்ளார். பெரும் தண்டனைக்கு ஆளாகி விடுவோமோ என்ற அச்சத்தில் இந்தியத் தூதரகம் உதவி செய்ய வேண்டும் என அபயக்குரல் எழுப்பி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவிடமும் முறையிட்டுள்ளனர்.
தற்போது அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் பாதிக்கப்பட்ட இந்தியர் களுக்கு உதவி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் சேவை மையத்தை திறந்துள்ளது. சிறப்பு அதிகாரியையும் நியமித்து இந்திய தூதரக அதிகாரிகள் 24 மணிநேரமும் சுறுசுறுப்பாக இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டோர் தொடர்பு கொண்டு புகார் செய்ய ஹாட் லைன் வசதியும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களில் பெரும்பான்மையினர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களைக் காப்பாற்றும் முயற்சிகளில் அமெரிக்க தெலுங்கு சங்கத்தின் நிர்வாகிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
சட்ட விரோதமாக குடியேறி இதுவரை பிடிபட்டுள்ள மாணவர்கள் தலைமறைவாகி விடக் கூடாது என்பதற்காக அவர்களின் கைகளில் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் நவீன கருவிகளை கட்டி விட்டுள்ளது அமெரிக்க போலீஸ் . இதனால் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தங்களை அமெரிக்க அரசின் தண்டனையில் இருந்து காப்பாற்றி இந்தியா திரும்ப உதவி கேட்டு பலரும் முறையிட்டு வருகின்றனர். அமெரிக்க போலீசின் இந்த அதிரடி வேட்டை இக்தியர்களை பெரும் கலக்கமடையச் செய்துள்ளது.