ஆஸ்திரேலிய வீரரின் புயல் வேகப்பந்து - தலையில் அடிபட்டு மைதானத்தில் மயங்கிய இலங்கை வீரர்!
ஆஸ்திரேலிய வீரர் பந்து தலையில் அடிபட்டு மைதானத்திலேயே மயங்கி விழுந்தார் இலங்கை கருணா ரத்னே. இவருடன் சேர்த்து தற்போதைய பயணத்தில் ஆஸி வீரர்களின் ஆக்ரோஷ பந்து வீச்சில் 5 இலங்கை வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸி அணி வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டி கான்பெராவில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸி அணி 534 ரன்கள் குவித்த நிலையில் இரண்டாம் நாளான இன்று இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது.
இலங்கை தொடக்க ஆட்டக்காரர்கள் திரி மானேவும், கருணா ரத்னேவும் ஆடிக்கொண்டிருந்தனர். 32-வது ஓவரை ஆஸ்திரேலிய புயல் வேகப்பந்து வீச்சாளர் பாட்கம்மின்ஸ் வீசினார். ஓவரின் 4வது பந்தை இலங்கை வீரர் கருணா ரத்னே எதிர்கொண்டார்.145 கி.மீ வேகத்தில் பவுன்சராக வந்த பந்தை எதிர்கொள்ள முடியாமல் குனிந்து தப்பிக்கப் பார்த்தார் கருணா. ஆனால் குறைவான உயரத்தில் பவுன்ஸ் ஆன பந்து முதலில் தோளில்பட்டு தலையின் பின் பகுதி, கழுத்தை பதம் பார்த்தது. பந்தின் வேகத்தில் ஹெல்மெட் டும் நொறுங்கியது. தலையில் அடிபட்டதுமே மைதானத்தில் சரிந்து விழுந்தார் கருணாரத்னே.
இதைக் கண்ட ஆஸி வீரர்கள் பதறிப் போயினர். சிறிது நேரத்தில் கருணாரத்னே நினைவு திரும்பியதால் வீரர்கள் ஆறுதல் அடைந்தனர். தலையில் வலி அதிகமாக இருப்பதாக கூறியதால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கருணாரத்னேவுக்கு அபாயமில்லை என மருத்துவர்கள் அறிவித்தனர்.
ஆஸி பயணத்தில் ஏற்கனவே நான்கு இலங்கை வீரர்கள் காயம்பட்டு நாடு திரும்பிய நிலையில் 5-வது வீரராக கருணாரத்னே காயம் பட்டுள்ளார்.