கொங்கு ஈஸ்வரனை மலைபோல் நம்பும் ஸ்டாலின்....வலையில் சிக்காமல் நழுவல்!

திமுக அணிக்குள் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியைக் கொண்டு வரும் வேலைகள் நடந்து வருகின்றன. இதற்காக சில கட்டப் பேச்சுவார்த்தைகளையும் தொடங்கியுள்ளனர்.

இதைப் பற்றிப் பேசும் திமுக புள்ளிகள், திமுக பலவீனமாக இருக்கும் பகுதியில் மேற்கு மண்டலமும் ஒன்று. கடந்த தேர்தல்களில் இங்கு அதிமுக வலிமையாக வென்றுள்ளது.

அங்குள்ள மாவட்ட பொறுப்பாளர்கள், கட்சியை வளர்க்கும் வேலையில் ஈடுபடவில்லை என்பதில் ஸ்டாலின் வருத்தத்தில் இருக்கிறார். கொங்கு மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கை உடைக்கும் வகையில் சிலரைக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்.

ஒருகாலத்தில் கொங்கு பிரதேசத்தில் ஆறு லட்சம் வாக்குகளை அள்ளிக் குவித்த ஈஸ்வரன் கட்சியைத்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி ஆகியோருக்கு எதிராக சமுதாய வாக்குகளை ஈஸ்வரன் பிரிப்பார் என நம்புகிறார் ஸ்டாலின்.

இந்த வாய்ப்பை ஏற்பது குறித்து ஈஸ்வரன் தரப்பினர் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. தேர்தல் நெருக்கத்தில் பார்த்துக் கொள்ளலாம் என மௌனம் காக்கின்றனர் என்கிறார்கள்.

இரண்டாவது உலக கொங்கு தமிழர் மாநாட்டை நாளை நாமக்கல்லில் நடத்த இருக்கிறார் ஈஸ்வரன். தேர்தல் தேதி நெருங்குவதால், தன்னுடைய செல்வாக்கை திராவிடக் கட்சிகளுக்குக் காட்டுவதற்காகவே ஊரெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர் அக்கட்சியின் பொறுப்பாளர்கள்.

-எழில் பிரதீபன்

More News >>