எந்த உலகத்தில் இருக்கிறாரோ அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்... வாஜ்பாய் பட்ஜெட்டை தாக்கல் செய்தாராம்!
பிரதமர் வாஜ்பாய் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என உளறிக் கொட்டி மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அமைச்சர்கள் மேடைகளில் உளறிக் கொட்டுவதில் சாதனை படைத்து வருகின்றனர். இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்குத்தான் முதலிடம்.
மத்தியில் ஆட்சி செய்வது மோடியா? மன்மோகன்சிங்கா? என தெரியாமல் பொதுமேடைகளில் உளறுவதில் வல்லவர். தற்போதும் நத்தத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அப்படித்தான் உளறி இருக்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திருந்தது. இதை அதிமுகவும் வரவேற்றிருந்தது.
ஆனால் திண்டுக்கல் சீனிவாசனோ, பிரதமர் வாஜ்பாய் அருமையான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் என பேசி ‘உளறல்’ பட்டியலில் முதலிடத்தில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார்.