நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி - 35 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான 5-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரையும் 4-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி.
வெலிங்டனில் இன்று நடந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா, 18 ரன்களில் 4 விக்கெட் இழந்து தத்தளித்தது. அம்பதி ராயுடு(90), சங்கர்(45), ஜாதவ்(34), பாண்ட்யா(45) கைகொடுக்க 49.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தொடர்ந்து ஆடிய நியூ சிலாந்து அணியின் ஹென்றி (8) முன்ரோ (24) டெய்லர் (1) சொற்ப ரன்களில் வீழ, 38 ரன்களுக்கு 3 விக்கெட் என்று தடுமாறியது . கேப்டன் வில்லியம்சனும் (39), லாதமும் (37) ஓரளவு தாக்குப் பிடித்தனர். அடுத்து வந்த நீஸம் அதிரடி காட்டி சிக்சர்/பவுண்டரியாக விளாசி ஆட்டத்தின் போக்கையே திருப்ப முயன்றார்.32 பந்துகளில் 44 ரன் விளாசிய நீஸமை தோனி தனக்கே உரிய பாணியில் ரன் அவுட் செய்து வெளியேற்றினார்.
இதன் பின் எஞ்சிய நியூசி.வீரர்கள் அடுத்தடுத்து அட்டாக 44.1 ஓவரில் 217 ரன்களில் ஆல் அவுட் ஆனது நியூசிலாந்து .35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியும் சாதனை படைத்தது இந்தியா. ஆட்டநாயகனாக அபாரமாக ஆடி 90 ரன் குவித்த அம்பதி ராயுடு தேர்வு செய்யப்பட்டார்.