பேருந்து கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 22ம் தேதி தமிழகம் முழுவதும் சிபிஐ(எம்) கண்டனக் குரல்
பேருந்து கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி, வரும் 22ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம் நடத்த இருப்பதாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசு 55 சதவிகிதத்திலிருந்து 100 சதவிகிதம் வரை பேருந்து கட்டணத்தை உயர்த்தி பேருந்துகளை பயன்படுத்தும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது அதிரடித் தாக்குதலை தொடுத்துள்ளது. ஏற்கனவே மத்திய பாஜக அரசின் தவறான பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நடவடிக்கைகள் அனைத்துப் பிரிவு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த தவறுவதால் அவ்வப்போது ஏற்படும் விலை உயர்வு மக்களை வதைத்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வு மக்களின் தலையில் விழுந்த பேரிடியாகும். அனைத்துப்பகுதி மக்களையும் கடுமையாக பாதிக்கிற இந்த கட்டண உயர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
போக்குவரத்துத்துறை என்பது லாப நோக்கத்தோடு செயல்படுத்தப்பட வேண்டிய துறை அல்ல. தமிழகத்தில் அன்றாடம் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தக் கூடிய சேவைத்துறையாகும். இது மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதற்கும், கிராமப்புற நகர்ப்புற ஏழை-எளிய உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பத்து பிள்ளைகள் கல்வி கற்பதற்கும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இன்றியமையாத அடிப்படைத் தேவையாகும். தமிழக அரசு வணிக நோக்கத்தோடு போக்குவரத்துக் கட்டணத்தை உயர்த்துவது தமிழக மக்களின் நலன்களுக்கும், வளர்ச்சிக்கும் எதிரானதாகும்.
தமிழக அரசின் ஆண்டு பட்ஜெட்டில் போக்குவரத்துத்துறைக்கு ஏற்படும் பற்றாக்குறை 1.5 சதவிகிதம் மட்டுமே. போக்குவரத்துத்துறையில் உள்ள நிர்வாகச் சீர்கேடு மற்றும் முறைகேடுகளை சரி செய்வது, பழுதடைந்த பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே இந்த பற்றாக்குறைகளை சரிசெய்திட முடியும். மேலும் போக்குவரத்துக்கான மானியத் தொகையை அரசு முறையாக வழங்கினாலே போக்குவரத்துத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த முடியும். மாறாக கட்டணத்தை உயர்த்தி மக்கள் தலையில் பாரத்தை சுமத்துவது தமிழக அரசின் மக்கள் மீதான அக்கறையற்றப் போக்கையே வெளிப்படுத்துகிறது.
மேலும் எதிர்காலத்தில் எரிபொருள், மசகு எண்ணெய் மற்றும் பராமரிப்புச் செலவு உள்ளிட்டவைகளில் ஏற்படும் கூடுதல் செலவினக் குறியீடுகளின் அடிப்படையில் அவ்வப்போது கட்டண உயர்வு அதிகாரிகளால் உயர்த்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருப்பது தமிழக மக்களுக்கு அதிமுக அரசு இழைத்துள்ள துரோகமாகும்.
எனவே, தமிழக அரசு அறிவித்துள்ள அதிரடி கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெறவும், அவ்வப்போது கட்டணத்தை உயர்த்த அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கையை கைவிடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
அனைத்துப் பகுதி மக்களையும் பாதிக்கக் கூடிய இந்த கட்டண உயர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் கண்டனக் குரல் எழுப்புமாறு அனைத்து பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. 2018 ஜனவரி 22 அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட / தாலுகா தலைநகரங்களில் மக்களோடு இணைந்து ஆர்ப்பாட்டம், தர்ணா, மறியல் என நடத்திட கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.