`மருந்து தீர்ந்து போய்விட்டது சிகிச்சை அளிக்க முடியாது - புற்றுநோய் பாதித்த பெண்ணை கலங்கடித்த அரசு மருத்துவமனை!

சென்னை பல்நோக்கு அரசு மருத்துவமனையில் மருந்து தீர்ந்துவிட்டதாக கூறி புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் மார்பக கட்டி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். பொருளாதார வசதி இல்லாத அவர் தொடர்ந்து அந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடியாததால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண்ணுக்கு பல்வேறு சோதனைகளை மேற்கொண்ட அரசு மருத்துவர்கள் எலும்பை ஸ்கேன் செய்ய வேண்டும் எனக் கூறி அதற்கான கருவி ஸ்டான்லி மருத்துவமனையில் இல்லை என்றும், சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

மருத்துவர்கள் கூறியபடியே, அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு சென்ற அவர், அங்கு 3,500 ரூபாய் கட்டணம் செலுத்தி ஸ்கேன் எடுக்க காத்திருந்துந்துள்ளார். அப்போது, அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க கால தாமதம் ஆகியுள்ளது. இதுகுறித்து அந்தப் பெண் விசாரித்த போது ``ஸ்கேன் எடுக்கும் முன் உடலில் தேய்க்க வேண்டிய மருந்து காலியாகிவிட்டது" எனக் கூறி அதிர்ச்சி அளித்துள்ளனர்.

உடனடியாக உயர் மருத்துவரிடம் அந்தப் பெண் புகார் அளிக்க அவரும், ``மருந்து காலியாகிவிட்டது. மீண்டும் மருந்து வந்ததும் உங்களை அழைக்கிறேன்'' எனக் கூறி அவரை அனுப்பி வைத்துள்ளார். ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை ஏழை, எளிய பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் அதிகம் பயன்படுத்தும் மருத்துவமனையாக இருக்கிறது. அப்படி இருக்கையில் அங்கு நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

More News >>