வருகிறது தமிழ்நாடு கிராம வங்கி - மத்திய அரசு புதிய திட்டம்!
பாண்டியன் கிராம வங்கியுடன் பல்லவன் கிராம வங்கியை இணைக்க மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
வாராக்கடன் பிரச்னை காரணமாக பொதுத்துறை வங்கிகளை மேம்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூரு, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவனந்தபுரம் போன்ற வங்கிகளை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் கீழ் ஒரே வங்கியாக மத்திய அரசு இணைத்தது.
மேலும் பொதுத்துறை வங்கிகளில் மறுசீரமைப்பு கொண்டுவரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முக்கிய கிராமப்புற பகுதிகளில் செயல்பட்டு வரும் கிராம வங்கிகளில் முதல் இந்த மறுசீரமைப்பை கொண்டுவர முடிவு செய்து, அதன் முதல் நடவடிக்கையாக தமிழகத்தின் கிராம வங்கிகளில் முதன்மையான பாண்டியன் கிராம வங்கி மற்றும் பல்லவன் கிராம வங்கிகளை இணைக்க மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளான இந்தியன் வங்கியின் சார்பு நிறுவனமாக பல்லவன் கிராம வங்கியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பு நிறுவனமாக பாண்டியன் வங்கியும் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு வங்கிகளுமே கிராமப்புற பகுதிகளில் வரவேற்புடன் செயல்பட்டு வருகிறது. இதனை தமிழ்நாடு கிராம வங்கி என்கிற பெயரில் செயல்படுத்தப்படும் என்றும், அடுத்த நிதி ஆண்டான ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செயல்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
கர்நாடக, கேரளா, ஆந்திர ஆகிய மாநிலங்களின் பெயர்களிலோ, அல்லது அந்தந்த மாநிலங்களின் முக்கிய நகரங்களின் பெயர்களிலோ பொதுத்துறை வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டின் பெயரிலோ, தமிழக நகரங்களின் பெயரிலோ எந்த பொதுத்துறை வங்கியும் இல்லை என்ற ஏக்கம் மக்கள் மத்தியில் நிலவி வந்தது. இதனை தமிழ்நாடு கிராம வங்கி போக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.