மம்தாவின் தர்ணா 2-வது நாளாக தொடர்கிறது - எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒட்டு மொத்த ஆதரவு!

சிபிஐயின் நடவடிக்கைக்கு எதிராக விடிய விடிய தர்ணா நடத்திய மம்தாவின் போராட்டம் 2-வது நாளாக இன்றும் தொடர்கிறது . தேவேகவுடா,ராகுல், ஸ்டாலின், மாயாவதி, அகிலேஷ்,பவார் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒட்டு மொத்தமாக மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சாரதா சிட்பண்ட் ஊழல் விசாரணை நடத்தி வரும் சிபிஐ கொல்கத்தா நகர காவல் ஆணையர் ராஜீவ்குமார் வீட்டை சோதனை நடத்த முயன்றதால் சர்ச்சை வெடித்துள்ளது. சிபிஐ அதிகாரிகளை மாநில போலீஸ் கைது செய்ய உடனே மத்திய போலீசைக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது மத்திய அரசு .

இதனால் ஆவேசமடைந்த மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் அமர்ந்து விட்டார். மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுகிறது. சிபிஐ மூலம் மாநில அரசை கலைக்க பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் சதி செய்வதாகக் கூறி இரவு முழுவதும் கடும் பனியில் தர்ணா நடத்தினார் மம்தா .

விடிய விடிய தர்ணா நடத்திய மம்தா 2-வது நாளாக இன்றும் போராட்டத்தைத் தொடர்கிறார். மம்தாவுக்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்.தலைவர், திமுக தலைவர் ஸ்டாலின், பவார், மாயாவதி, அகிலேஷ், தேஜஸ்வி யாதவ், பரூக் அப்துல்லா, மகபூபா முப்தி, ஜிக்னேஷ், ஹர்திக் படேல் என நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒட்டு மொத்த ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மம்தாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ராகுல், காங்கிரஸ் தங்களின் போராட்டத்திற்கு தோளோடு தோள் கொடுக்கும் என்றார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், மத்திய பாஜக அரசு அரசியல் சாசன அமைப்புகளின் தன்னாட்சி அதிகாரத்தை பறிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மம்தாவின் போராட்டத்தால் கொல்கத்தா பரபரப்பாக காணப் படுகிறது. அடுத்த கட்டமாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவிக்க மம்தா ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

More News >>