சின்னத்தம்பியை கும்கியாக மாற்றப் போவதில்லை, வனத்துக்குள் விடப் போகிறோம் - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி!

சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றப் போவதில்லை என்றும், மீண்டும் காட்டுக்குள் விடத்தான் முயற்சிகள் நடப்பதாக உயர்நீதிமன்றத்தில் வனத்துறை உறுதியளித்துள்ளது.

காட்டுக்குள் விடப்பட்ட சின்னத்தம்பி யானை மீண்டும் கோவை, பொள்ளாச்சி பகுதியில் புகுந்துள்ளது. மக்களை அச்சுறுத்தாமல் சுற்றி வருகிறது. கடந்த 3 நாட்களாக உடுமலை அடுத்த மடத்துக்குளம் பகுதியில் சுற்றி வருகிறது. பகலில் புதரான பகுதியில் ஓய்வெடுப்பதும், இரவில் அருகில் உள்ள கரும்புத் தோட்டத்தில் புகுந்து உணவு தேடுவதுமாக உள்ளது.

சின்னத்தம்பி யானை மீண்டும் மீண்டும் ஊருக்குள் வருவதால் அதனை கும்கியாக மாற்றப் போகிறோம் என்று வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கூறியிருந்ததற்கு வன விலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக தலைமை வனத்துறை அதிகாரி சஞ்சய் ஸ்ரீவஸ்தவா ஆஜராகி கூறுகையில், சின்னத்தம்பியை கும்கி யாக மாற்றப் போவதில்லை. 2 கும்கி யானைகளின் உதவியுடன் சின்னத்தம்பியை பிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. மீண்டும் வனப்பகுதியில் தான் விடப்போவதாவும் உறுதி அளித்தார்.

 

More News >>